சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதையடுத்து நீதிபதி தஹில் ரமாணி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் தற்போதுவரை பங்கு கொள்ளவில்லை.
இந்நிலையில் நீதிபதி தஹில் ரமாணியின் பணியிடமாறுதல் பரிந்துரைக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ’ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டவர் மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்வது அனுமதிக்கப்பட்டதா?
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாறுதல் முடிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறதா? உச்ச நீதிமன்ற கொலிஜியத்தால் மேற்கொள்ளப்படுகிறதா? தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் பணியிடமாறுதல் செய்ய முடியுமா? பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் தலைமை நீதிபதியை பணியிடமாறுதல் செய்ய முடியுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
மேலும், தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக, கொலிஜியம் நீதித் துறை உத்தரவாக பிறப்பிக்கவில்லை, அது நிர்வாக உத்தரவு என்பதால் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது குறித்து நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் ஒரு நீதிபதியை பணியிடமாறுதல் செய்ய முடியாது. குறைந்த அதிகாரமே உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு உள்ளது. நீதிபதியை பணியிடமாறுதல் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கிடையாது. நீதிபதிகள் நியமனம், பணியிடமாறுதல், நீக்கம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் கொலிஜியம் ஆலோசனை மட்டுமே செய்யலாம். குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி நீதிபதிகளை நியமிக்க மட்டுமே கொலிஜியத்துக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ”பாதிக்கப்பட்ட நீதிபதிகள்தான் வழக்கு தொடர முடியும். நீதிபதிகளின் கடமையும் ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்டதே. அந்தச் சட்டத்தின்படிதான் எவரும் நடக்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் இந்தக் கேள்வி முதல்முறையாக எழுப்பப்படுகிறது. வானளாவிய குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.