சீனாவில் உயிா்க்கொல்லியான கரோனா (corona) என்ற வைரஸ் வேகமாகப் பரவி 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சீன நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை, விமான நிலையத்திலேயே மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு, சீனாவிலிருந்து நேரடி விமான சேவை இல்லை என்றாலும் ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகள் வழியாகப் பயணிகள் வருகின்றனர். இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அலுவலர்கள் முடிவுசெய்தனர்.
பன்னாட்டு முனையத்தில் பயணிகள் வருகைப் பகுதியில் பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி, குடியுரிமை சோதனைப் பகுதிக்குச் செல்லும்முன், மூன்று சிறப்பு மருத்துவக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர் தலைமையில், ஒவ்வொரு கவுன்ட்டரிலும் இரண்டு மருத்துவ உதவியாளா்கள் வீதம் ஆறு பேர் பணியில் உள்ளனர்.
அதன்படி, ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி குடியுரிமைச் சோதனைக்கு செல்லும் முன்பாக, மருத்துவப் பரிசோதனை கவுன்ட்டருக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஒவ்வொரு கவுன்ட்டரிலும் வைரஸ் நோய் உள்ளதா என்பதைக் கண்டறிய ’மைக்’ போன்று நவீன கருவி முன்பு ஊதச் சொல்லி, கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினியில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆய்வுசெய்யப்படுகிறது. தற்போதுவரை சென்னை வந்த பயணிகளுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு சீனா, வெளிநாட்டைச் சேர்ந்த யாருக்காவது வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவா்களை அதே விமானத்தில் திருப்பியனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவேதான், குடியுரிமைச் சோதனைக்கு முன்பாகவே மருத்துவச் சோதனை நடத்தப்படுகிறது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவும் கரோனா வைரஸ்!