சென்னை: சென்னை பிராட்வே ஆச்சாரப்பன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவர்தன். இவரது மகன்கள் நந்தீஷ், ராகேஷ். கடந்த 31ஆம் தேதி கோவர்தன் வேலை சம்பந்தமாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அவரது மகன்கள் இருவரும் அடுத்த தெருவில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டனர்.
பின்னர் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 4.5 லட்சம் பணம், 32 சவரன் நகைகள் கொள்ளைபோய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தீஷ் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பிளனேடு காவல் துறையினர் கைரேகை வல்லுநர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சிசிடிவியை ஆய்வுசெய்துள்ளனர்.
இதனையடுத்து பூக்கடை துணை ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் விசாரணையில் நந்தீஷின் உறவினரான ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (23) அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்துசென்றது தெரியவந்ததை அடுத்து அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
திட்டம் தீட்டித் திருடிய உறவினர்
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளிக்கவே காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டதை ராகேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சென்னாராம் (32), கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (24) ஆகியோரை கைதுசெய்த தனிப்படை காவல் துறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றது.
மேலும் தப்பி ஓடிய ரஞ்சித், லக்ஷ்மணன் என்பவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
நகை பொருள் பறிமுதல்
கைதுசெய்யப்பட்ட மூன்று நபர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 23 சவரன் நகைகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. தப்பியோடிய இரண்டு நபர்களைக் கைது செய்தால்தான் மீதமுள்ள நகையும், பணமும் பறிமுதல்செய்யப்படும் எனக் காவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் சென்றுள்ள தொழிலதிபர் வீட்டில் உறவினரே திட்டம் தீட்டி நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பணத்தாசையில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது