சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் வடசென்னை மாவட்ட தலைவர் பக்கீர் முகமது தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செப்டம்பர் 10ஆம் தேதியன்று பேரறிஞர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தையின் அடிப்படையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் புறக்கணிப்பது முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்திலும் அரசு மெளனம் காப்பது வேதனையளிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசின் இந்த பாரபட்சமான செயல்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொண்டு தமிழ்நாடு அரசு செப்டம்பர் 15ஆம் தேதியன்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும், 7 தமிழர்களையும் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடசென்னை மாவட்டம் சார்பாக 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்ட கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.