சென்னை: ஐஐடி மானுடவியல் துறையில் பொருளாதார உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் விபின் புதியதாத் வீட்டில். இவர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்துள்ளார். இவர் வெளிநாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
இந்நிலையில், சென்னை ஐஐடியின் உதவிப் பேராசிரியரான விபின், ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "சென்னை ஐஐடியில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்தேன். தற்போது சென்னை ஐஐடியில் இருந்து வேறு நிறுவனத்திற்கு பணிக்குச் செல்கிறேன்.
ஒடுக்குமுறைகள் பலவிதம்
நான் விலகுவதற்கான முதல் காரணம், நான் இங்கு சந்தித்த சாதிய ஒடுக்குமுறைகள்தான். அரசியல், பாலின சார்புகளை தாண்டி பல்வேறு அதிகார மட்டங்களில் உள்ள நபர்களால் பல ஒடுக்குமுறைகளுக்கு ஆளானேன்.
சென்னை ஐஐடியில் நிலவும் சாதி ரீதியான பாகுபாடு குறித்து கேட்டால், அங்கு அப்படி ஒன்றும் பெரிதாக சாதிய பாகுபாடு இல்லை என்பார்கள். ஆனால், பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களுடன் நான் உரையாடிபோது, மற்றவர்கள் நினைப்பது உண்மைக்கு தூரமாக இருப்பது தெரியவந்தது.
சாதிய ரீதியிலான பாகுபாடுகளை களைவதற்கு பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறிய முடியும். அந்தக் குழு உறுப்பினர்களாக பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர்களை கொண்டு பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கலந்தாலோசனை வழங்க வேண்டும்.
ஒடுக்குமுறையை சந்திப்பவர்கள் இந்த குறைதீர்ப்பு குழுவிலோ அல்லது நீதிமன்றத்திலோ புகார் அளித்து சமூக முன்னேற்றத்துக்கான பாதையில் நகர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பாத்திமாவுக்கு முன்னும் பின்னும்
கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னை ஐஐடி வளாகத்தில் சாதி, மத பாகுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தற்போது மீண்டும் சாதி ரீதியான பாகுபாடுகள் குறித்து உதவி பேராசிரியர் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளதை அடுத்து, இதற்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஐஐடி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4 ஆண்டுகள் நிறைவு- ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு கௌரவம்!