இலங்கையைச் சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை 1987ஆம் ஆண்டு மத்திய அரசு தடைசெய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின் இந்த தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த இந்த தடைக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கம் என்று அறிவிக்க போதுமான காரணம் உள்ளதா, இல்லையா என விசாரணை செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
இந்த நடுவர் மன்றம் ஜூன் 11ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை விசாரணை நீதிபதியிடம் நேரில் விளக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் விளக்கம் அளிக்க ஜூலை 26ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்பின் சார்பில், தமிழ்நாடு அரசு இதை பொது அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.