சென்னை: பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. பெட்ரோல் செலவிற்காக ஒவ்வொரு மாதமும் தனியாக ஒரு தொகையை ஒதுக்கவேண்டிய கட்டாயத்திற்கு சாமானியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைக் குறிவைத்து இளைஞர்கள் சிலர் பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்துத்து வருகின்றன.
அம்பத்தூர் ஒரகடம் எஸ்.வி.நகர் சிவ சண்முகம் தெருவில் பெட்ரோல் திருட்டு அரங்கேறியுள்ளது. யமஹாஆர் 15 வாகனத்தில் வரும் 3 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை குறிவைத்து பெட்ரோல் திருடுவதற்கு கையில் தண்ணீர் கேன்களுடன் வலம் வருகின்றனர்.
செங்குன்றம் சாலையை ஒட்டிய அமைந்துள்ள வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அவர்களில் ஒருவன், நோட்டமிடுகிறான். பின் ஆட்கள் யாருமில்லாத நேரத்தில் வேகமாக தாங்கள் வைத்திருக்கும் டியூப் ஒன்றின் மூலம் வாட்டர் பாட்டிலில் பெட்ரோலை உறிந்து விட்டு செல்கின்றனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மற்றொரு வாகனத்திலும் இதை செய்கிறார்கள் அந்த இளைஞர்கள். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
முன்னதாக, சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது. இவை போன்ற குற்ற சம்பவங்கள் ஒரு புறம் நடப்பதற்கு காரணம், இப்பகுதியில் போலீசார் சரிவர ரோந்து பணிகளில் ஈடுபடுவதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுப்பதா? என பொதுமக்கள் தயக்கம் காட்டுவதும் பெட்ரோல் திருடர்களுக்கு சாதமாக அமைந்து விடுகிறது. இருச்சக்கர வாகனங்கள் நூதனமாக திருடும் காலம் மாறி தற்போது பெட்ரோலை திருடி செல்லும் காலம் வந்துவிட்டது என அப்பகுதி மக்கள் நொந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: ‘அதிகமாக பேசுறீங்க உட்காருங்க’ - புகார் அளித்த பெண்ணால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என். நேரு!