சென்னை: வண்ணாரப்பேட்டை 49-ஆவது வார்டு மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் இளைய அருணா, அதிமுக சார்பில் ஏ.டி அரசு, பாஜக சார்பில் வன்னியராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
அப்போது வாக்குப்பதிவானது நடந்து வந்த நிலையில் திமுக வேட்பாளர் இளைய அருணா தலைமையில் திமுகவினர் 49 வார்டு வாக்குசாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு வந்த அதிமுக மற்றும் பாஜகவினர், திமுகவினரை தட்டிக்கேட்ட போது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகன், பாஜக பிரமுகர் ராமையா ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை சேர்ந்த ஒருவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து திமுகவை சேர்ந்த நரேஷ், அதிமுக ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதே போல் அதிமுகவை சேர்ந்த ஜெகநாதனும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருவரின் புகாரின் பேரில் தண்டையார்ப்பேட்டை காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
மேலும் அடையாளம் தெரியாத 10 திமுகவினர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
144 தடை உத்தரவு சென்னையில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறியும், அரசு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்,
தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் என நான்கு பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட தொண்ணூற்று ஐந்து ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 113 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மேடையில் பாஜக நிர்வாகி காலில் விழுந்த மோடி - வைரலாகும் காணொலி!