சென்னை ; சென்னை பன்னாட்டு விமான நிலைய 2 ஆம் கட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், விமானநிலையம் பெருமளவில் புதுப்பொலிவு பெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம், விமான நிறுத்துமிடங்கள் அதிகரிக்கப்படுவதுடன் புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகளும் நிறைவடைய உள்ளதால் வரும் ஆகஸ்ட் 1 முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வசதியுடன் பார்வையாளர்களுக்காக சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டி பிளக்ஸ் வசதிகள் உள்ளன.
பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில், மின்சார வாகனங்களுக்கான மின்சார சாா்ஜிங் வசதி முனையங்களும் அமைக்கப்பட உள்ளன. மேற்குப்புற வாகன நிறுத்துமிடத்தில் 3 மின்சார வாகன சாா்ஜிங்க் முனையங்களும், கிழக்குப்புறத்தில் 2 சாா்ஜிங் முனையங்களும் அமைக்கப்பட உள்ளன.
மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக சாா்ஜிங்க் நிலைய வசதி காரணமாக வாகன நிறுத்துமிடம், வாகன சந்தையின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், எதிர்கால தேவைகளுக்கேற்ப கூடுதல் சாா்ஜிங்க் முனையங்களும் அமைக்கப்படும். வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தும் பார்வையாளர்கள், அதற்கான பிரத்யேக செயலியில் உரிய கட்டணம் செலுத்தி, மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங்க் முனையங்களை முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்படுகிறது.
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் செயல்பட தொடங்கியதும் தற்போது தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் நகர்ப்புற பகுதி அழகுற மிளிரும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல முயன்றவர் கைது