சென்னை, எழிலகத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு காணொலி அரங்கில், மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத்தலைவர் பொன்னையன் தலைமையில், 11ஆவது மாநில அதிகார மேம்பாட்டு குழுக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், "மலைவாழ் மக்களுக்காக 2015-16ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 75 கோடி ரூபாய் நிதி உதவியுடன் மலைப்பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ’சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, மண்வளம் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண்மை, ஆதி திராவிடர், பழங்குடியினர் நல மேம்பாடு, கால்நடை வளர்ப்பு நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகள் அமைத்தல், மீன் வளர்ப்பு போன்ற பணிகளின் வழியாக, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ முதலமைச்சர் பழனிசாமி அனைத்து நடவடிக்கைகளும் இத்திட்டத்தின் வழியாக செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களின் எண்ணிக்கை எட்டு லட்சமாக உள்ளது. இவர்களுக்காக 1,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு நிர்வாக செலவினத்தைக் குறைத்தாலும் இத்திட்டச்செலவினை குறைக்கவில்லை. இத்திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கி 2020-21ஆம் நிதியாண்டுக்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கிறோம். குறிப்பாக, இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் நீண்ட காலத்துக்கு முன்பே கொண்டு வரப்பட்ட முடிவு. அறிவியல்ரீதியாக படித்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும். அதை விடுத்து அரசியல் ரீதியாக இந்தியாவைக் கட்டி ஆள வேண்டும் என்பதற்காக, எதிர்கால மக்கள், மனிதவள மேம்பாட்டை பெறாமல் இருக்கக் கூடிய சூழலை இந்தி வெறியர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்" என்றார்.