சென்னை: தங்க சாலையில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமியுடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், “பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இன்று பாஜக இல்லை எனில் தமிழ்நாட்டில் அரசியலே இல்லை என்ற நிலையுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் தான் இருக்கு. திமுகவை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து விரட்யடிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சரை சட்டப்பேரவையில் அமர வைப்போம்.
மத்திய பாஜக அரசு, நம் மாநிலத்திற்கு மட்டுமே ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. விவசாயிகளுக்கு மட்டும் மாதம் 6000 ரூபாய் கொடுக்கிறது மத்திய அரசு.
திமுக தலைவர் ஸ்டாலின் காலையில் எழுந்தால், மத்திய அரசை குறை சொல்ல வேண்டும்; மோடியை குறை சொல்ல வேண்டும் என்றே கண்ணை விழிக்கிறார். பொய்க்கு அர்த்தம் என்றால், அது திமுக தலைவர் ஸ்டாலினுக்குதான் சரியான பொருத்தமாக இருக்கும்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் திமுக நடத்திய போராட்டம் படுதோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியை சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர்களுக்குத் தர தமிழ்நாட்டு மக்கள் தர தயாராக உள்ளார்கள்” என்றார்.