சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிச.26) அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை காசிமேடு கடற்கரையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, கடலில் மலர் தூவி மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “ தமிழ்நாடு வரும் பாஜக தலைவர்கள் அவர்களது கட்சியினரை குஷிப்படுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஆயிரம் கருத்துகளை தெரிவிப்பார்கள், அதற்கெல்லாம் நாங்கள் மதிப்பு அளிக்க முடியாது. பாஜகவின் நிலைப்பாடு குறித்து அதன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தான் அறிவிக்க வேண்டும்.
பட்டியலின சமுதாயத்தினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு சமூக பொருளாதார அரசியல் களங்களில் உயரும் வகையில் அதிமுக அரசு திட்டங்களை வகுத்து, நடைமுறைப்படுத்தி வருகிறது.
இட ஒதுக்கீடு விஷயத்தை மிகுந்த கவனமாக கையாள வேண்டும் என்ற அடிப்படையில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் அறிக்கையைப் பொறுத்தே தமிழ்நாடு அரசு அதனை நடைமுறைப்படுத்தும். பாமக கூட்டணியில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கூட்டணியில் அவர்கள் தொடர்ந்து இருப்பார்கள்.
அதிமுக கட்சியில் குடும்ப அரசியல் கிடையாது. இங்கு கொடி பிடிக்கும் தொண்டன் கூட முதலமைச்சராக முடியும். ஆனால், திமுகவில் தாத்தா மகன், பேரன் என்று வாரிசு அரசியல் செய்கின்றனர்.
வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சி திமுக. எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் இன்றும் இருப்பார்கள் நாளையும் இருப்பார்கள் தொடர்ந்து எப்போதும் இருப்பார்கள். தேர்தல் தேதி அறிவிக்கின்றபோது, மெகா கூட்டணியோடு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும்.
சீமான் வாங்கும் 3% வாக்கும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்” என்றார்.
இதையும் படிங்க : சீமானை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!