சென்னையில் மட்டும் ஆயுதப்படைக் காவலர்கள் 123 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவர்களில் 63 பேர் குணமடைந்து இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
எழும்பூர் ராஜரத்தினம் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பூங்கொத்து கொடுத்தும், ஏனைய காவலர்கள் இசை வாத்தியங்கள் முழங்கவும் வரவேற்றனர்.
காவலர்களை ஊக்குவிக்கும்விதமாக அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர், கபசுரக் குடிநீரையும் வழங்கினார். அப்போது, மேடையில் பேசிய ஏ.கே. விஸ்வநாதன், “கரோனாவால் சென்னையில் மட்டும் மொத்தம் 321 காவலர்கள் பாதிக்கப்பட்டு, அதில் 120 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் ஆயுதப்படைப் பிரிவிலும் இன்று பணிக்குத் திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று காலத்தில், காவல் துறை, மருத்துவத் துறை, அரசுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காகச் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர்.
கரோனாவை வென்று காவலர்கள் பணிக்குத் திரும்பியது பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து காவலர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர் ஜெயராமன், நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, காவல் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 3 மாசம் வாடகை கட், உணவு, ரூ.7,500...! - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மனிதநேய காவலர்