சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு மே 11ஆம் தேதி மதியம் 12 மணி வரை, வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.
மேலும் சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு மு.அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் அளித்தார். அதேபோல், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியின் வேட்புமனுவை நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்தார்.
சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மதியம் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி வரை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். எனவே, இருவரும் போட்டியின்றித் தேர்வாகியுள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கின்றனர்.