சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 65ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றது. ஆறு மாதங்களிலேயே நிர்வாகச் சீர்கேடு தொடங்கிவிட்டது. திமுகவின் தேனிலவு காலம் முடிந்துவிட்டது.
பிரதமர் படம் இடம்பெறுவதே ஜனநாயகம்
கரோனா தடுப்பூசி, சிகிச்சைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றனர். கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரதமரின் புகைப்படத்தை தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றில் பயன்படுத்திவருகின்றன.
தடுப்பூசி மையங்களில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் (கருணாநிதி) ஆகியோரது புகைப்படங்களுடன் பிரதமரின் புகைப்படமும் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களில் பிரதமர் படம் இடம்பெற வேண்டும்.
மே, ஜூன் மாதங்களில் ஆட்சிக்கு வந்த திமுக அரசால், ஜூன் 21 வரை ஒரு தடுப்பூசி டெண்டர்கூட வாங்க முடியவில்லை. வழக்குப்போட்டு முடக்கிவிட முடியாது. மத்திய அரசின் முயற்சியால்தான் தற்போது தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.
அம்பேத்கரை வைத்து திருமா வியாபாரம்
நாகலாந்து எல்லை மாநிலமாக உள்ளது. அங்கு, உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்களினால் குழப்பங்கள் ஏற்படுவது சகஜமாகி வரும் நிலையில், அங்கு நடந்த ராணுவத் தாக்குதலின்போது பொதுமக்களும் இருந்தது வருந்தத்தக்க செயல்.
இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தாக்குதல் செய்தவர்கள் மீதும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.
திருமாவளவன், கே. பாலகிருஷ்ணனைப் போல அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி பாஜக இல்லை. அம்பேத்கர் பிறந்த இடமாகக் குறிப்பிடப்படும் பகுதிகளில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜகதான். பஞ்ச தீர்த்தம் என அழைக்கப்படும் அம்பேத்கர் வரலாற்றைக் குறிப்பிடும் பகுதிகளில் அம்பேத்கர் நினைவு மண்டபங்களைக் கட்டியது பாஜகதான்.
அம்பேத்கரை முழுமையாகப் படிங்க திருமா!
திருமாவளவன், பாலகிருஷ்ணன் போன்றோர் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி திருமாவளவன் கட்சி. திருமாவளவன் முதலில் அம்பேத்கரை முழுமையாகப் படிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள், பொது இடங்களில் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமாக காவல் நிலையத்தில் மணிகண்டன் உயிரிழந்திருப்பது பொதுமக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது. மணிகண்டன் மரணம் தொடர்பாக முழு விசாரணையை காவல் துறை உயர் அலுவலர்கள் நடத்த வேண்டும்.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு மசூதி
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் மசூதிக் கட்டிக் கொள்வதற்கான இடமும் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.