சென்னை: பழனிவேல் தியாகராஜன் தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவர், பிடிஆரின் கைப்பையைச் சோதனை செய்தார். சோதனையில் அவரின் கைப்பையில் இரண்டு மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த அலுவலர், ஏன் இரண்டு மடிக்கணினிகளை கொண்டு செல்கிறீர்கள் என பிடிஆரிடம் வினவினார். உடனே பதிலளித்த பிடிஆர், “நான் மாநில நிதி அமைச்சர், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன். இரண்டு மடிக்கணினிகள் எடுத்துச் செல்லக் கூடாது என ஏதாவது சட்டம் உள்ளதா” எனக் கேட்டார்.
பிடிஆருடன் பாதுகாப்பு அலுவலர் வாக்குவாதம்
இவரின் பதிலை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்புப் படை அலுவலர், தொடர்ந்து பிடிஆரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த அலுவலருக்குத் தமிழ் தெரியவில்லை, ஆங்கிலமும் சரியாகப் புரியவில்லை எனத் தெரிகிறது. இந்தி மட்டுமே பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அமைச்சரும் இந்தியில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, இரண்டு மடிக்கணினிகளையும் தாங்களே வைத்துக்கொள்ளுமாறும், விமானத்திற்கு நேரம் ஆகிவிட்டதாகக் கூறி பிடிஆர் செல்ல முயன்றார்.
இதனையறிந்த விமான நிலைய உயர் அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து பிடிஆரை சமாதானப்படுத்தினர். அப்போது பேசிய அவர், “பயணிகளுக்கு உதவி செய்யதான் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவர் இரண்டு மடிக்கணினிகள் எடுத்துச் செல்லக் கூடாது என ஏதாவது விதிமுறை உள்ளதா” எனக் கேட்டார்.
மன்னிப்புக் கேட்ட அலுவலர்கள்
அதற்கு அப்படி எந்த விதிமுறையும் கிடையாது எனப் பாதுகாப்பு அலுவலர்கள் கூறி, நடந்த சம்பவத்திற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளரும் மன்னிப்புக் கேட்டார். இதையடுத்து, தனது மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட பிடிஆர் விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.
இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் - திமுகவினர் மோதல்