சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 18) 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று வேளாண் துறைக்கான பட்ஜெட் அறிக்கையைத் தமிழ்நாடு வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மீன்வள பாதுகாப்பிற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அதன் அறிக்கையில்,
“தற்போது நாட்டு இன மீன் இனங்கள் இயற்கை நீர்நிலைகளில் வெகுவாக குறைந்து வருகின்றன. நாட்டின் மீன்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு நாட்டின மீன்களை வளர்த்து உயர் வருவாய் பெற்றிட மீன் வளர்ப்போருக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் செலவில் மீன்குஞ்சு உற்பத்தி கட்டமைப்பு, மீன்குஞ்சு வளர்ப்பிற்கான வசதிகள், ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும் மீன் வளர்ப்போருக்கு நாட்டின மீன் இனங்களை வளர்த்திடப் பயிற்சிகள் வழங்கப்படும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம்
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய நன்னீர் மீன்குஞ்சு பொரிப்பகம் அமைத்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், மீன் வளர்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல், பயோஃபிளாக் தொழில்நுட்பம் மூலம் மீன்வளர்த்தல் ஆகிய உள்நாட்டு மீன்வள மேம்பாட்டுத் திட்டங்கள் 21 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
புதிய அரசு மீன் பண்ணைகள்
தமிழ்நாட்டில் மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ்வீடுர், நல்லிக்கோட்டை, மணிமுத்தாறு, திருகாம்புலியூர், அசூர், பிளவக்கல், சிற்றாறு, பவானிசாகர் பழைய மீன் பண்ணை, ஒகேனக்கல், வெம்பக்கோட்டை ஆகிய 10 இடங்களில் அரசுமீன் பண்ணைகள் 34 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மீன்குஞ்சு உற்பத்தியினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23ஆம் நிதியாண்டில் நான்கு கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள மீன் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் ஒக்கூர் கிராமத்தில் புதியதாக மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைத்தல், மடித்து எடுக்கக்கூடிய தொட்டிகளில் மீன் வளர்ப்பு, நவீன மீன் விற்பனை அங்காடி அமைத்தல் போன்ற மீன்வளத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட்: ஸ்மார்ட்போன் மூலம் நீர் பாய்ச்ச மானியம்!