சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் அறிக்கையில், பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என திமுகவால் கூறப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நம்பிக்கை சிதைப்பு
மேலும், மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய நேரத்தில் 2022ஆம் ஆண்டின் பொங்கல் பரிசுப் பையில் "இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு இருப்பது தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், 'தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், 2008 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம், இந்தச் சட்டம் சாதாரண மனிதனின் உரிமையைப் பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள் சொன்னதாக தனது அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் இச்சட்டத்தை ரத்து செய்ததையும் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த அரசு முடிவு