சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய இடங்களில் மெகா கரோனா தொற்று தடுப்பூசி பணிகள் நடைபெற்றன.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதலாம் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற 11 மெகா கரோனா தொற்று தடுப்பூசி முகாம்களில் 2 கோடியே 06 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
இதுவரை 7 கோடி பேர்...
வடகிழக்கு பருவமழை காரணமாக 22 மாவட்டங்களில் மழை பெய்த போதிலும், நேற்று (நவம்பர் 28) நடைபெற்ற 12ஆவது மெகா கரோனா தொற்று தடுப்பூசி முகாம்களில் 16 லட்சத்து 5 ஆயிரத்து 293 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில், முதல் தவணையாக 5 லட்சத்து 89 ஆயிரத்து 140 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 10 லட்சத்து 16 ஆயிரத்து 153 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 78.35 விழுக்காட்டினருக்கு முதல் தவணையாகவும், 43.86 விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது 7 கோடிக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை நேரடியாக ஆய்வு செய்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 12வது மெகா தடுப்பூசி முகாமினை முன்னிட்டு இன்று (நவம்பர் 29) கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Omicron Variant virus: கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு!