தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னதாக ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து, தொழில், வணிக சங்க அமைப்புகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 9ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், "சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்க்ஷா, கால் டாக்சி வாகனங்கள் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை (இஎம்ஐ) கட்டுவதற்கு கால அவகாச நீட்டிப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும்’ என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில், சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், ஆறு மாத காலத்திற்கு இஎம்ஐ கட்ட அவகாசம் வழங்கிட வேண்டும். இந்தக் காலத்தில் வட்டி ஏதும் வசூலிக்கப்பட கூடாது. தொழிலாளர்களிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் ஈட்டுறுதித் தொகையை, ஆறு மாதங்களுக்கு பிடித்தம் செய்திடக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.