கடந்த 2012ஆம் ஆண்டு சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக மத்திய குற்றப்புலனாய்வு துறைக்கு (சிபிஐ) ரகசியத் தகவல் வந்தது. இதனடிப்படையில், சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையின்போது, கணக்கில் வராத 400.47 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும் மத்திய குற்றப்புலனாய்வு துறை வழக்குப்பதிவு செய்தது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும், 400.47 கிலோ பறிமுதல் செய்தது தொடர்பான ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற ஆயிரத்து 160 கோடி ரூபாயை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அலுவலர் ராமசுப்பிரமணியனிடம் வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றம் உத்தரவின்படி, சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடுத்து, எடை பார்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. மீதமிருந்த 103.864 கிலோ தங்கம் காணாமல்போனது தெரியவந்தது.
இதையடுத்து, காணாமல்போன 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அலுவலரான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று விசாரனைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிபதி, “ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு சுரானா நிறுவனத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது என்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பந்தமாக தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அலுவலரைக் கொண்டு விசாரிக்க வேண்டும். அந்த விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.
தங்கம் எடை குறையும் உலோகம் அல்ல. இது சிபிஐ-க்கு ஒரு அக்னிபரீட்சை போன்றது. இந்த மோசடியில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு