இந்த வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காண தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி. ட்வின்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்தது.
தற்போது மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரித்து 32,067 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 212 புள்ளிகள் அதிகரித்து 9367 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகின்றன.
ஏற்றம்-இறக்கம் கண்ட பங்குகள்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக நான்கு விழுக்காடு வரை ஏற்றம் கண்டுள்ளன. அதைத் தொடர்ந்து சன் பார்மா,மாருதி, எச்.டி.எஃப்.சி. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளன.
அதேபோல என்.டி.பி.சி., பவர் கிரிட், ஆசிய பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போது அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 207.29 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இந்திய பங்குச் சந்தையில் விற்றுள்ளனர்.
காரணம் என்ன?
வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைந்துவருவதாலும் சர்வதேச தலைவர்கள் பலரும் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதுமே பங்குச் சந்தை உயரக் காரணம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
சர்வதேச பங்குச் சந்தை
சர்வதேச அளவில் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வர்த்தமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 1.89 விழுக்காடு உயர்ந்து 24.34 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: அரசின் அறிப்பை காற்றில் பறக்க விட்ட விமான நிறுவனங்கள்! டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!