பொருளாதார தேக்கநிலை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பங்குச்சந்தையானது தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலுக்குப்பின் சுமார் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது. இந்தச் சூழலில் கடந்த வாரம் பங்குச்சந்தை மிதமான மீட்சியைக் கண்டது. நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு ஏறுமுகத்தைச் சந்தித்தன.
சனி, ஞாயிறு, பக்ரீத் விடுமுறைக்குப்பின் செவ்வாய்க்கிழமையான இன்று பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 70 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. வாரத்தின் ஆரம்பத்திலேயே சரிவைக் கண்டுள்ள பங்குச்சந்தை, நாள் இறுதியில் முன்னேற்றத்துடன் முடியும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.