கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மையான பொருட்களுக்கு வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்களும், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
கடந்த 2018-19 நிதியாண்டில் ஜிஎஸ்டி வரியாக சுமார் 12.9 லட்சம் கோடி ரூபாய் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது மாதாந்திர சராசரியாக சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிடப்பட்டது. நிதி அமைச்சகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுபோலவே ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரியானது 1,03,458 கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்தது.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,06,577 கோடி வசூலாகி ஜிஎஸ்டி வசூலில் உச்சத்தை தொட்டது. 2018-19ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த மாதாந்திர சராசரி ரூ.98,114 கோடியாகும். இது முந்தைய ஆண்டைவிட 9.2 விழுக்காடு கூடுதலாகும்.
2019-20 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் ரூ.1,13,865 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 10.05 விழுக்காடு அதிகமாகும். 2018-19ஆம் நிதியாண்டின் சராசரியுடன் ஒப்பிடும்போது 16 விழுக்காடு அதிகமாகும். மார்ச் முதல் ஏப்ரல் 30 வரை 72.13 லட்சம் பேர் சரக்கு மற்றும் சேவை வரித் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.