இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜி.டி.பி கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.8 விழுக்காடாக குறைந்துள்ளது. வரும் 5ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சி குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எழுத்து வடிவில் பதிலளித்த அவர், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியே அரசின் பிரதான கொள்கை முடிவு. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். விவசாயிகளுக்காகக் குறைந்தபட்ச ஊதியத்திட்டம், சிறு குறு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை அதிகரிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது சாதகமான பலன்களை ஈட்டிவருகிறது. பணமதிப்பு நீக்கத்தால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு, தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு போன்ற அம்சங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது", என்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் மேலும் பல திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.