2016ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பை மத்திய அரசு நீக்கியது. கருப்புப் பண நீக்கம், பணமில்லா பரிவர்த்தனை, பயங்கரவாத குற்றச்செயல்களைத் தடுத்தல் போன்ற நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் மாநிலங்களவை கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தார். அதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் நாட்டில் பணப்புழக்கம் 22 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார். நாட்டில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவே பணமதிப்பு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், அமைச்சரின் இந்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நிலவரப்படி 17 லட்சத்து 74 ஆயிரத்து 187 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாகவும், கடந்த மே 31ஆம் தேதி நிலவரப்படி இந்த தொகை 21 லட்சத்து 71 ஆயிரத்து 385 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேலையில் போலி ரூபாய் நோட்டுக்களைத் தடுப்பதில் பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை பெரிதும் உதவியதாக அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2016-17ஆம் ஆண்டு, 7 லட்சத்து 62 ஆயிரத்து 72 போலி நோட்டுகளும், 2017-18ஆம் ஆண்டு 5லட்சத்து 22 ஆயிரத்து 783 போலி நோட்டுகளும், 2018-19ஆம் ஆண்டு 3லட்சத்து 17 ஆயிரத்து 389 போலி நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.