டெல்லி: வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020-2021ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய தனி நபர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். அதேபோல நிறுவனங்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
கரோனா தொற்று அதிகரித்துவருவதால், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்தக் கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது. அதன்படி, தனி நபர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ஆம் தேதி வரையும், நிறுவனங்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி வரையும் கால நீட்டிப்பு வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுபோல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையும், வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31ஆம் தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.