அமெரிக்காவின் 28 வகையான பொருள்கள் மீது இந்தியா கடந்தாண்டு வரிகளை உயர்த்தியது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்புக்கு எடுத்துச் செல்லப்போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். எனினும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்தது. அந்தப் புகாரில், இந்தியாவின் நடவடிக்கை உலகளாவிய வர்த்தக விதிகளுக்கு முரணானது என்று குற்றஞ்சாட்டியிருந்தது.
அந்தப் புகாரை உலக வர்த்தக அமைப்பு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா குறிப்பிடும் விஷயத்தை ஆராய சச்சரவு தீர்வு குழு ஒன்றை நிறுவியுள்ளது. சுங்கவரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (GATT) என்பது ஒரு உலக வணிக அமைப்பின் ஒப்பந்தமாகும். இது பல பக்கவாட்டு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டு உருவாக்கப்பட்டது. சுங்க வரி போன்ற வர்த்தகத் தடைகளைக் குறைப்பதன் மூலம் அல்லது நீக்குவதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் கட்டுப்பாடு, உலக வர்த்தகத்தில் இரு விதிகளை மீறுவதாக அமெரிக்கா கருதுகிறது. மேலும் இந்த வரி விதிப்பை அமெரிக்கா மீது மட்டும் இந்தியா பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் மற்ற உறுப்பு நாடுகள் மீது செயல்படுத்தவில்லை. அந்த நாடுகள் பழைய முறைப்படி இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்கின்றன. இதுவும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுள் ஒன்று. இந்தக் குற்றஞ்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த சச்சரவு தீர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்வு மையத்தில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களின் தரப்பு நியாயத்தை முன்வைக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் சச்சரவு தீர்வு செயல்முறையின்படி, ஆலோசனைகளுக்கான கோரிக்கை ஒரு சர்ச்சையின் முதல் படியாகும். மேலும் இரு தரப்பினரும் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க, திருப்திகரமான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. 60 நாள்களுக்குப் பிறகும் சர்ச்சையைத் தீர்க்கத் தவறினால், புகார் அளிப்பவர் ஒரு குழுவினால் தீர்ப்பைக் கோரலாம்.
இந்தியா பாதாம் பருப்பு வகைகள், அக்ரூட் பருப்பு, சுண்டல், போரிக் அமிலம், ஃபவுண்டரி அச்சுகளுக்கான பைண்டர்கள் உள்ளிட்ட 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக சுங்க வரிகளை விதித்துள்ளது. இதில் இரும்பு, எஃகு பொருள்கள், ஆப்பிள், பேரீச்சம்பழம், அலாய் ஸ்டீல், குழாய் பொருத்துதல்கள், திருகுகள், போல்ட், ரிவெட்டுகள் ஆகியவையும் அடங்கும். எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு சுங்க வரி அதிகரித்து, அந்நாட்டின் நடவடிக்கைக்குப் பதிலடியாக உயர்த்தப்பட்டன. 2017-18 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 47.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 26.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. வர்த்தக இருப்பை பொறுத்தமட்டில் அது இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது.
இதையும் படிங்க: மோடியின் வெளியுறவுக் கொள்கையின் புதிய ஆயுதம்...!