மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான பில்கேட்ஸ் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், கூகுள் நிறுவனத்தின் வெற்றி, அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சந்தித்த வீழ்ச்சி குறித்தும் மனம் திறந்து பேசினார்.
மென்பொருள் சந்தையில் ஆண்ட்ராய்டு வருகைக்குப் பின் மைக்ரோசாஃப்ட் மென்பொருளுக்கு இடமில்லாமல் போனது. இதையடுத்து, தற்போதைய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் மென்பொருளான ஆண்ட்ராய்ட் 85 விழுக்காடு பங்களிப்பை வைத்துள்ளது. இதன் காரணமாக ஒரு காலத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கொண்டு முன்னணி கைப்பேசியாக வலம்வந்த நோக்கியா நிறுவனம் காலாவதியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆண்ட்ராய்ட் மென்பொருளின் அசுர வளர்ச்சி, அதன் காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனராக தான் மேற்கொண்ட தவறுதான் என மனம் திறந்து ஒப்புக்கொண்டுள்ளார் பில்கேட்ஸ்.
இது குறித்து அவர், மென்பொருள் சந்தையில் வெற்றியாளர்களே சந்தையின் முழு ஆதிக்கத்தையும் கையில் வைத்துக்கொள்கின்றனர். கூகுள் நிறுவனத்துக்கு இப்படிப்பட்ட சாதகமான சூழல் உருவாவதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அப்போது நான் மேற்கொண்டு முறையற்ற நிர்வாகமே காரணம் என்றார்.
ஆப்பிள் மென்பொருளை வீழ்த்த நான் பல்வேறு முயற்சிகள் செய்த காலத்தில் ஆண்ட்ராய்டின் சிறப்பம்சத்தைக் கவனிக்கத் தவறிவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார் பில்கேட்ஸ்.
பில்கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து பதவி விலகியதையடுத்து அந்த பொறுப்பை தற்போது சத்ய நாதெல்லா என்ற இந்தியர் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.