சான் பிரான்சிஸ்கோ: டிக் டாக் செயலியை வாங்கும் எண்ணம் இல்லை என கூகுள் நிறுவன தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த வலையொளி (போட்காஸ்ட்) நிகழ்வான ‘பிவோட் ஸ்கூல் லைவ்’இல் சுந்தர் பிச்சை பங்கேற்றபோது, நியூயார்க் பல்கலைகழக பேராசிரியர் ஸ்காட் கல்லோவே, ‘டிக்-டாக் நிறுவனத்தை வாங்க விருப்பமுள்ளதா?’ என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “டிக்-டாக் நிறுவனத்தை வாங்கும் எண்ணம் இல்லை” எனக் கூறினார்.
மேலும், “கூகுளின் மேகக் கணினி சார்ந்த சேவைகளை டிக்-டாக் நிறுவனம் பயன்படுத்திவருகிறது. கரோனா காலங்களில் டிக்-டாக் செயலி பயனர்கள் மத்தியில் ஒரு அபரிவித வளர்ச்சியை கண்டுள்ளது. அதேபோல பல செயலிகளும் இந்த காலகட்டத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. இது தொழில்நுட்ப வளர்ச்சியின் தூண்டுதலுக்கு பெரும் ஊக்கியாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக டிக்-டாக் மீது இந்தியா விதித்த தடையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், 90 நாட்களுக்குள் நிறுவனத்தை உள்நாட்டுக்கு விற்பனை செய்யவேண்டும் என்றும், இல்லையேல் தடை விதிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு கெடு விதித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் இந்த தடை அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றங்களில், இச்செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.