அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ஃபெட் எக்ஸ் சரக்கு போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகத்தில் முன்னணியில் உள்ளது. உலக வர்த்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்நிறுவனம், இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் சென்னையில் தங்களது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையிலிருந்து ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், மருந்துப் பொருட்கள், ஆடை, பிளாஸ்டிக் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மீதும், மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மீதும் கவனம் செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சென்னையில் இன்று 130க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களை சந்தித்து, அவர்களுக்குப் பல்வேறு வகையில் உதவ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதன் செயல்பாட்டுத் துறை துணைத் தலைவர் முகமது சயேக், ” நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறு, குறு நிறுவனங்கள் அடுத்தக் கட்டத்துக்கு வளர்வதற்குத் தேவையான உதவியையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம். இது தவிர சிறு, குறு நிறுவனங்களின் சிறப்பானத் தயாரிப்புகளை தேர்வு செய்து, அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை நிதி அளிக்கிறோம். நாட்டில் அதிக சிறு, குறு நிறுவனங்கள் உள்ள நகரங்களில் சென்னை முன்னணியில் உள்ளதால், நாங்கள் சென்னையில் கவனம் செலுத்துகிறோம் ” என்றார்.
தொடர்ந்து பேசிய ஃபெட் எக்ஸ் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குநர் ஆர்த்தி நாகராஜ், ” சிறு, குறு நிறுவனங்களின் பிரச்னைகளை கேட்டறிந்து அவர்களுக்குத் தீர்வு வழங்கும் விதிமாக நிபுணர்களைக் கொண்டு அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சிறு, குறு நிறுவனங்களின் பொருட்களை நாட்டின் மற்றப் பகுதிகளுக்கு எவ்வாறு கொண்டு செல்வது, வெளிநாடுகளுக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து வழிகாட்டி வருகிறோம் ” என்று கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்கிறதா கியா மோட்டர்ஸ் நிறுவனம்?