ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிக் குறைப்பு, கடன் தவணை அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் ரஜ்னிஷ் குமார் தனது கருத்தை தெரிவித்தார்.
அது குறித்து அவர் பேசியதாவது, "பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை வங்கிக் கடன் பெற்றவர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே இ.எம்.ஐ. கடன் தவணை காலக்கெடுவை பயன்படுத்திக்கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள பணப்புழக்கச் சிக்கலை கடன் தவணை காலக்கெடு அறிவிப்பு சீர்செய்யும்.
அரசின் மொத்த அறிவிப்பும் பொருளாதார மீட்டெடுப்பு என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அரசின் இந்த நோக்கத்தை வட்டிக்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லும்.
அடுத்த மூன்று மாத காலத்திற்கு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூலம் சந்தைக்கு முறையான வகையில் பணம் செலுத்துவதன் மூலம் தேக்கமடைந்துள்ள வர்த்தக நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறேன்" எனக் கூறினார்.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதத்தின் போதும் ரிசர்வ் வங்கி இ.எம்.ஐ. கடன் தவணை காலக்கெடுவை மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: நடப்பு நிதியாண்டில் பூஜ்ஜியத்துக்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி