இந்திய ஆட்டோமொபைல் துறை கோவிட்-19 பரவலுக்கு முன்னரே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது. விற்பனை குறைந்ததால் டிவிஎஸ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேலையில்லா நாள்களைக் கடைப்பிடித்தன.
இந்நிலையில், மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டோமொபைல் மட்டுமின்றி அனைத்து தொழில் துறைகளும் முற்றிலும் முடங்கின. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கார்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மிகப்பெரிய நிறுவனமான மாருதி சுசூகியின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 விழுக்காடு உயர்ந்து 1,72,862ஆக உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்நிறுவனத்தின் நடுத்தர மற்றும் பெரிய ரக கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது, அதேநேரம் சிறிய ரக கார்களின் விற்பனை குறைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்திடன் விற்பனையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.2 விழுக்காடு உயர்ந்து 56,505ஆக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஒரு மாதத்தில் விற்பனை செய்துள்ள அதிகபட்ச கார்களின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 52,001 கார்களை விற்பனை செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல டொயோட்டா, மஹிந்திரா&மஹிந்திரா, எம்.ஜி.மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : இரண்டாவது காலாண்டில் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாபம் 5 சதவீதம் உயர்வு!