கரோனா பேரிடர் காரணமாக 2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் இன்று (செப்.30) வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரித் தாக்கலுக்கான கடைசி நாள், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று முறை இந்த இறுதித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இறுதித் தேதி மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதிக்கும், ஜூன் 30ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதிக்கும், பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் நீட்டிக்கப்பட்டது.
பேரிடர் காலத்தில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மத்திய நிதியமைச்சகத்தின் செயலர் ராஜராஜேஷ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டின் உற்பத்தித் துறையில் தொடரும் வீழ்ச்சி