கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை
ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது. 2017 முதல் கட்டப்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார்.
ஆட்சி மாற்றம்
ஆனால் ஆந்திராவில் தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசு கொண்டு வரும் புதிய நடைமுறைகளால் அந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்க்கும் ஆட்களில் அம்மாநிலத்தவருக்கு கட்டாயம் 75 சதவிகிதம் இடமளிக்க வேண்டும் என ஆந்திர அரசு சட்டம் இயற்றியுள்ளது. தங்களுக்குத் தேவையான திறன் கொண்ட நபர்கள் உள்ளூரில் கிடைக்காததால், புதிய ஆட்களில் எடுப்பதில் கியா மோட்டர்ஸ் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கியா மோட்டர்ஸ் நிறுவனம் தற்போது அனுபவித்து வரும் முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கிய மின்சாரக் கட்டணச் சலுகை மற்றும் நிலத்துக்கான சலுகைகளை திரும்பப்பெற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கியா மோட்டர் நிறுவனம் தனது தொழிற்சாலையை ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறைந்திருக்கும் தமிழகத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கியா மோட்டர் அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாகவும், ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
செய்தி உண்மையில்லை
ஆனால், இதற்கு கியா மோட்டர்ஸ் நிறுவனமும், ஆந்திர அரசும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் நிறுவன வளர்ச்சியில் ஆந்திர அரசு துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இது தொடர்பாக தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தத்தை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கியா மோட்டர்ஸ் குறித்து நடக்கவில்லை என மறுத்தார்.
அச்சத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்
ஜெகன் மோகன் ரெட்டி அரசு, முந்தை அரசு மேற்கொண்ட பல ஒப்பந்தங்களை திரும்பப் பெறும் முடிவில் இருப்பதால் தொழில்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில், குறிப்பாக ஆந்திராவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுவதாகவும் தொழில்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு