வங்கி நடவடிக்கை, ஓய்வூதியம் உள்ளிட்ட நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலாகவுள்ளன. அதன் பட்டியல் இதோ
செக் புக் செல்லாது - வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் காசோலைகள் செல்லாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை நிதியமைச்சகம் மேற்கொண்டது.
அதன்படி, அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும், ஓரியன்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய இரு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் இணைக்கப்பட்டது.
எனவே, இந்த இனைப்பு நடவடிக்கைக்குப் பின் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகள் வழங்கிய பழைய காசோலைகள் அக்டோபர் ஒன்று முதல் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டோ டெபிட் வசதி திட்டம் - அக்டோபர் 1ஆம் தேதி முதல், ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு அம்சத்தின்படி, வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் எனப்படும் தானியங்கி பண எடுக்கும் முறையை வங்கிகள் தனிச்சையாக செயல்படுத்த முடியாது. வாடிக்கையாளர்கள் ஆட்டோ டெபிட் ஆப்ஷனை செயல்படுத்தினால் மட்டுமே கணக்கிலிருந்து தானாக பணம் எடுக்க வங்கிக்கு உரிமை உண்டு.
ஓய்வூதிய விதிகளில் மாற்றம் - டிஜிட்டல் ஆயுள் சான்று பெறுவதில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை தபால் நிலையங்களில் உள்ள ஜீவன் பிரமான் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதை நவம்பர் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொண்டால்தான் எதிர்காலத்தில் ஓய்வூதியம் சார்ந்த பலன்களை இடர்பாடின்றி கிடைக்கும்.
இதையும் படிங்க: பண்டிகை காலம் வருது... உஷார் மக்களே! - அரசு எச்சரிக்கை