நாட்டின் பொதுத்துறை வங்கிகள் பெருநிறுவனத்திற்குக் கொடுத்த கடன் திருப்பிச் செலுத்தப்படாததால், வங்கி வாராக்கடனாக பல லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி மூவாயிரம் கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு பிரபல வைர வியாபாரி வெளிநாட்டிற்குத் தப்பிச்சென்றார். இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி, ஓரியன்டல் வங்கி, ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி என பல்வேறு வங்கிகளில் வாராக்கடன் புகார் அதிகளவில் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கியில் இதேபோல் மோசடி புகார் தற்போது வெடித்துள்ளது. நாட்டின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான பூஷண் ஸ்டீல் நிறுவனம் அலகாபாத் வங்கியிடம் ஆயிரத்து 774 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்றுத் திரும்பப் பெறாமல் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலகாபாத் வங்கி இது தொடர்பாக சிபிஐ நிறுவனத்தில் புகார் தெரிவித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பூஷண் ஸ்டீல் நிறுவனம், அலகாபாத் வங்கி நிர்வாகிகள், ஊழியர்களிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.