டெல்லி: பிரபல ஸ்கூட்டர்களான லாம்ப்ரெட்டா, விஜய் சூப்பர் ஆகியவற்றை தயாரித்த ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை மூட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த இந்த நிறுவனத்தில், 97.7 விழுக்காடு பங்கினை மத்திய அரசு வைத்திருந்தது. இந்த நிறுவனம் 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
உள்நாட்டில், ‘விஜய் சூப்பர்’ எனும் பெயரிலும்; வெளிநாடுகளில், ‘லாம்ப்ரெட்டா’ எனும் பெயரிலும் ஸ்கூட்டர்களை தயாரித்து சந்தைப்படுத்தியது. அடுத்தகட்டமாக, ‘விக்ரம்’ எனும் பெயரில், மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்தது. ஆனால் போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாமல் வருவாயை இழந்து தவித்து வந்த நிறுவனம், மூடும் நிலைமைக்கே சென்றது.
ஹோண்டா க்ரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிசன் அறிமுகம்!
இந்த நிறுவனத்தை விற்பதற்கும், முதலீடுகளை பெருக்குவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து நிறுவனத்தை மூட முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான பரிந்துரை மத்திய நிதி குழுவிடம் வைக்கப்பட்டது.
தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் ஏல முறையில் விற்கப்படும். நிறுவனத்தின் பெயர், அங்கீகாரம் அனைத்தும் தனி ஏல முறையில் விற்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.