உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாடு விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல் குறித்து யோசித்து கொண்டிருக்காமல் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் வரும் 18,19ஆம் தேதிகளில் முதலமைச்சரை நேரில் சந்தித்து விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து, வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.
மேலும், 'கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை வீணாகக் கடலில் கலந்து விட்டது. ஆனால், தண்ணீர் இல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். அதனால், இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முல்லைப்பெரியாரில் வரும் டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தப்படவுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் பீம் செயலி, சிங்கப்பூரில் பயன்பாடு