மும்பை: கரோனா நோய்க்கிருமித் தக்கத்தின் பிந்தைய காலத்தில் ஒற்றை மூலச்சந்தை எனச் சீனாவை உலகம் சார்ந்திருந்த தருணங்கள் குறையும் என்றும் அது இந்தியாவுக்கு வாய்ப்புகளை வழங்கும் எனவும் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
டி.சி.எஸ்.இன் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன், கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக நடத்தப்படும் முதல் பங்குதாரர் சந்திப்பு இது என்று கூறினார்.
மேலும், "தொழில்நுட்ப உலகம் ஊழியர்களை வீட்டிலிருந்து (WFH) வேலை செய்ய நகர்த்துகிறது. அதேபோல நாங்களும் அதனைச் செயல்படுத்திவருகிறோம்.
சீனாவின் வூகானில் தோன்றிய கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று, சீன வர்த்தகத்தை நம்பியிருக்கும் நிலையை, மறுபரிசீலனை செய்ய உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைத் தூண்டியிருக்கிறது. அதேசமயம், வர்த்தகப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து உலகம் ஒரு சந்தையை சார்ந்து இருக்க முடியாது என்பதைத் தெளிவாகப் புரியவைக்கிறது" என்று அவர் கூறினார்.
இச்சூழலில் சீனாவைச் சார்ந்திருக்கும் நிறுவனங்கள், அந்நாட்டில் தங்கள் நகர்வுகளைப் பரிசீலனை செய்யும்பட்சத்தில், இந்தியாவுக்கு அது வாய்ப்பாக அமையும். இந்திய நிறுவனங்கள் களம் காண தயாராகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 11ஆம் தேதி வர்த்தகத்தின் முடிவில், டி.சி.எஸ். பங்கின் விலை 1.92 விழுக்காடு சரிந்து ரூ.2,067.80 ஆக இருந்தது.