மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விளாச்சேரி மொட்ட மலையை சேர்ந்தவர் கருப்பையா(42) இவருக்கு பொன்னம்மாள்(32) என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் வளையல் வியாபாரம் செய்துவந்தார். இவர் நேற்று இரவு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இவருடைய மனைவி பொன்னம்மாள் வெளியே வந்து பார்த்தபோது கணவன் இறந்துகிடப்பதாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொன்னம்மாளுக்கும் திருமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆறுமுகம் அக்கா வீடு, கருப்பையா வீட்டு அருகே இருப்பதால் அடிக்கடி பொன்னம்மாளும் ஆறுமுகம் சந்தித்து இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே அவர் பொன்னம்மாளை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ஆறுமுகம், கருப்பையா இருவரும் மது குடித்துள்ளனர். கருப்பையாவிற்கு போதை தலைக்கேற ஆறுமுகம் தான் வைத்திருந்த கைக்குட்டையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக பொன்னம்மாள் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.