டெல்டா விவசாய பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு, மேட்டூரிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார் எனப் பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் இந்த நீர் கரூர், திருச்சி வழியாகக் கல்லணையை ஜூன் 15ஆம் தேதி அதிகாலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பொதுப்பணித் துறையினர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.
மேலும் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சட்ரஸ்கள் ஏற்றி, இறக்கப்பட்டு சரியானபடி இயங்குகிறதா என்று ஆய்வுசெய்து பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தண்ணீரை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
டெல்டா பகுதிகளான திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட காவிரி கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றுசேர அனைத்து குடிமராமத்துப் பணிகளும் துரிதமாக நடந்துவருகின்றன.
இந்தத் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம், அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.சி. சம்பத் ஆகியோரும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், புதுச்சேரி ஆகியவற்றை நிர்வாகம் செய்துவருகின்ற ஆட்சியர்களும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியின் காரணமாக கல்லணையே விழாக்கோலம் பூண்டுள்ளது.