கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், 17 ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் இ - பாஸ் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை நீடித்து வருகிறது. ஆனால், இ-பாஸ் தளர்வு காரணமாக கொடைக்கானல் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், கொடைக்கானல் பகுதிக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களின் பெயர், முகவரி, மொபைல் நம்பர் உள்ளிட்ட சுய விவரங்கள் வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து கொடைக்கானல் மலை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதை தவிர்க்கும் விதமாக வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் காலை வேளையில் கொடைக்கானல் நகர் பகுதிக்குள் நுழைந்தால் இரவுக்குள் வெளியேற வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் கொடைக்கானல் பகுதிகளில் தங்கினால் 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் கொடைக்கானல் பகுதிக்கு சென்னை, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இ-பாஸ் பெற்று அதிகமான மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால், கொடைக்கானல் நுழைவாயில் சோதனைச்சாவடி சற்று பரபரப்பாக காணப்படுகிறது.