திருப்பத்தூர் இஸ்மாயில்பேட்டையில் பழமை வாய்ந்த மசூதியில் மேல் தளத்தில் சென்ற ஒரு மாதமாக கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (செப்.8) ஜலகாம்பாறை பகுதியை சேர்ந்த பாரதி (46) , இஸ்லாமிய பேட்டை பகுதியை சேர்ந்த பிலால் (27), பாண்டியன் ஆகியோர் கட்டுமான பணிக்காக கம்பி ஒன்றை மேல் தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் பாரதி, பிலால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பாண்டியன் என்பவர் காயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர காவல்துறையினர் உயிரிழந்த இருவரை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.