இஸ்தான்புல் (துருக்கி): துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூலை 3ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இந்த வழக்கில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் இரண்டு உதவியாளர்கள் உள்ளிட்ட 20 சவூதி அரேபியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருமே தங்கள் சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முதல் நாளில், கஷோகியை மணக்கவிருந்த ஹாடிஸ் செங்கிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கஷோகியை வஞ்சகமாக தூதரகம் வரவழைத்து, படுகொலை செய்த கொடூரர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்றார்.
ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், கஷோகி படுகொலை தொடார்பாக சவூதியில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்த நாட்டு நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு இறுதியில் தீர்ப்பளித்தது.
எனினும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய அலுவலர்கள் இருவரை நீதிமன்றம் விடுவித்தது. இந்தத் தீர்ப்புக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இச்சூழலில், கஷோகி படுகொலை தொடர்பாக துருக்கி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.