திருச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலையான கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதனால், காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டன.
மேலும், காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகளுக்கு மாற்றாக வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் நிலையான கடைகளுக்கு எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 70 நாள்களுக்கும் மேலாக காந்தி மார்க்கெட் திறக்கப்படவில்லை. இதனால் காய்கறி வியாபாரிகள் தவிர மீதம் உள்ள மளிகை, வெல்லம், அரிசி கடைகள் திறக்கப்படாமல் உள்ளன.
இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாகவும், மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால் எங்களது கடைகளைத் திறந்து செயல்பட அனுமதி கோரி பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தினமும் காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை எங்களது கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்றார்.