பெயர் : தொல் திருமாவளவன்
கட்சி: விடுதலை சிறுத்தைகள் (விசிக)
தொகுதி: சிதம்பரம்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட்டார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், திருமாவளவன், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
ஒவ்வொரு சுற்று முடிவிலும், இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். ஒருகட்டத்தில், திருமாவளவனை விட சந்திரசேகர் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று இருந்ததால், அவரே வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி சுற்று எண்ணிக்கையில் 2 ஆயிரத்து 845 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் த்ரில் வெற்றிபெற்று அசத்தினார்.
திருமா குறித்த தகவல்கள்:
அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தொல்காப்பியன், பெரியம்மாள் தம்பதிக்கு 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி மகனாகப் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பட்டம் முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ குற்றவியல் படிப்பு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், அண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.
மதுரை அரசு தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணியாற்றிய இவர், தலித் பேந்தர்ஸ் அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்தார். அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த மலைச்சாமியின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், நீங்களே தலைமையேற்க வேண்டும் எனக் கூறியதை ஏற்றுக் கொண்டார். அரசுப் பணியில் இருந்தபோதும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து இயங்கினார்.
1992-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைத் தொடங்கினார். இயக்கப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால், இதுவரையில் திருமணமே செய்துகொள்ளாமலே வாழ்ந்துவருகிறார். தேர்தல் அரசியலுக்குள் திருமாவளவனை அழைத்து வந்த பெருமை ஜி.கே.மூப்பனாரையே சேரும். தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததால், அரசுப் பணியை உதறினார். தற்போது ஐந்தாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் களம் காண்கிறார்.
சிதம்பரம் தொகுதியில் 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்குமுறை போட்டியிட்டாலும், 2009-ம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட அவர் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியுற்றார். தற்போது, பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் த்ரில் வெற்றிப் பெற்று அரியாசனம் ஏறியுள்ளார்.