தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஏராளமானோர் உரிய அனுமதியின்றி வருவதாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவில்பட்டி- சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் ஆட்சியர் திருப்பியனுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த ஒரு வாரம் வெளிமாவட்டங்களிலிருந்து உரிய அனுமதியுடனும், அனுமதியின்றியும் ஏராளமானோர் வருகின்றனர். இதில், சிலர் போலி இ-பாஸ் மூலமாக வருவதாகவும் புகார்கள் வந்தன. தூத்துக்குடி மாவட்ட எல்லைகளான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி, எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதில், ஏராளமானோர் இ-பாஸ் இல்லாமல் நடந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து முக்கியமான ஏழு சிறிய சாலைகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாகக் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்துக்குள் இரவு நேரங்களில் நடந்து வருவோரும் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். போலி இ-பாஸ் மூலமாக வருபவர்களை உடனடியாகக் கண்டறிய சோதனைச்சாவடிகளில் பணியில் உள்ள அலுவலர்களின் செல்போனில் க்யூஆர் ஸ்கேனர் செயலி தரவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இ-பாஸை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை சமூகப் பரவல் இல்லை.
மக்கள் அதிகம் செல்லும் ஊர்களுக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.