செத்து மிதக்கும் மீன்களை ஆய்வு செய்த எம்எல்ஏ! - Saravanapoigai
மதுரை: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் செத்து மிதக்கும் மீன்களை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மீன்கள் செத்து மிதந்த செய்தியை அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், மீன்கள் உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து கோயில் நிர்வாகி, ஆய்வாளர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து சந்தித்து கூறுகையில், "திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கடந்த இரண்டு நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக் கிடப்பதை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆய்வு மேற்கொண்ட போது தண்ணீரில் ஒரு விதமான ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பதாகத் தெரியவருகிறது.
இதனை ஆய்வுக்கு உட்படுத்தி ரசாயனம் கலந்து இருக்கும் பட்சத்தில் யார் இந்த செயலில் ஈடுபட்டிருக்கும் என உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் இதுபோன்ற நிலை ஏற்பட்ட போது லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்தது.
அப்போதே திருப்பங்குன்றம் மக்கள் சரவணப் பொய்கையை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அறிவியல் ஆய்வாளர்களும், 4 மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது உடனடியாக செயல்பட்டு அலுவலர்கள் சரவணப் பொய்கையை தூய்மைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் தனது சொந்த நிதியிலிருந்து சரவணப்பொய்கை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்" எனக் கூறினார்.