புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருந்தாந்தலை கிராமத்தில் வசித்து வந்தவர் லீலாவதி(52). இவரது மகன் சந்தோஷ் குமார்(26). சந்தோஷ் குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் மது குடிக்கத் தனது தாயிடம் அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
மது குடிக்க பணம் தர தனது தாய் லீலாவதி மறுத்தால் அவரை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தோஷ் குமார் மது குடிப்பதற்கு லீலாவதியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், லீலாவதி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து லீலாவதி மேல் ஊற்றி தீ வைத்து அவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி சென்றார்.
இச்சம்பவம் குறித்து அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன் நேற்று (மார்ச்.28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையும், அவர் 40 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அவர் தனது தவறை உணர்வதற்காக மூன்று மாதம் தனிமைச் சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஈரோடு பள்ளியில் கொடுமை; குழந்தைகளை கழிவறை சுத்தப்படுத்த வைக்கும் ஆசிரியை!